search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.ஜ.க. அலுவலகம்"

    முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி விமானம் மூலம் நேற்று சென்னை கொண்டு வரப்பட்டது. அவருடைய அஸ்தி தமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. #Vajpayee #BJP
    சென்னை:

    முன்னாள் பிரதமரும், பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் கடந்த 16-ந்தேதி டெல்லியில் காலமானார். அவரது உடல் மறுநாள் தகனம் செய்யப்பட்டது. இந்த அஸ்தியை நாடு முழுவதும் உள்ள புனித நதிகளில் கரைக்க பா.ஜனதா முடிவு செய்தது. அதன்படி அஸ்தியின் ஒரு பகுதியை ஹரித்வார் கங்கை நதியில் வாஜ்பாய் குடும்பத்தினர் கரைத்தனர்.

    டெல்லியில் அவரது அஸ்தி கலசங்களை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நேற்று மாநில தலைவர்களிடம் ஒப்படைத்தார். இதில் 7 கலசங்களை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக்கொண்டார். அவருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ் மற்றும் வாஜ்பாய் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

    டெல்லியில் இருந்து விமானம் மூலம் வாஜ்பாய் அஸ்தியை தமிழக தலைவர்கள் சென்னை எடுத்து வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வேனில் வாஜ்பாயின் அஸ்தி கலசங்கள் தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்துக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன.

    இந்த ஊர்வலத்தில் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், செயலாளர் கரு.நாகராஜன், துணைத்தலைவர் பி.டி.அரசகுமார், இளைஞரணி செயலாளர் ஜி.கே.எஸ்., ஊடகப்பிரிவு தலைவர் பிரசாத், முன்னாள் எம்.எல்.ஏ. கோ.ரவிராஜ் உள்பட பலரும் பங்கேற்றனர். ரதத்தின் முன்பும், பின்பும் பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் அணிவகுத்து வந்தனர்.

    வாஜ்பாய் அஸ்தி நேற்று இரவு 7.20 மணிக்கு கமலாலயம் கொண்டு வரப்பட்டு அங்குள்ள பாரதமாதா சிலையின் கீழே வைக்கப்பட்டது. வாஜ்பாய் அஸ்திக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், மனிதநேய மைய அறக்கட்டளை தலைவரும், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயருமான சைதை துரைசாமி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், நடிகர் விஜயகுமார், துறைமுகம் பொறுப்புக்கழக உறுப்பினர் பிரகாஷ், சென்னை நாடார் சங்க செயலாளர் விஜயகுமார் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.



    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, “வாஜ்பாய் வழியில் இந்த தமிழகத்தை வழிநடத்த வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு இந்த அஸ்தியை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். அஸ்தி கமலாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இதில் கட்சி எல்லை, மொழி எல்லை, கொள்கை எல்லை ஆகியவற்றை கடந்து வந்து அஞ்சலி செலுத்தலாம்” என்றார்.

    மத்திய இணை-மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “தமிழகம் முழுவதும் இந்த அஸ்தி யாத்திரை செல்லும். எந்த மக்களுக்காக வாஜ்பாய் வாழ்ந்தாரோ, அதே மக்களின் தரிசனத்துக்காக அவரது அஸ்தி கொண்டு செல்லப்படுகிறது” என்றார்.

    வாஜ்பாய் அஸ்திக்கு இன்று (வியாழக்கிழமை) முழுவதும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் அஸ்தியை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட உள்ளது.

    வாஜ்பாய் அஸ்தியை சென்னை, மதுரை, திருச்சி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஈரோடு (பவானி) ஆகிய 6 இடங்களில் கரைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. 7 கலசங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதால் கூடுதலாக தஞ்சை காவிரி ஆற்றிலும் அஸ்தியை கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 
    ×